பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு ஆயுர்வேத மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி கூறினார்.
நாகர்கோவில்,
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு ஆயுர்வேத மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி கூறினார்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் டீன் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அறுவை சிகிச்சை
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்பவை கர்ப்பப்பையின் தசைப்பகுதியில் ஏற்படக்கூடிய பெரிதும் தீங்கு விளைவிக்காத அதாவது புற்று அல்லாத கட்டிகள் ஆகும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இக்கட்டிகளினால் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் அதிக ரத்தப்போக்கு, ரத்தக்கட்டியுடன் கூடிய மாதவிடாய், மாதவிடாயின் போது அதீத அடிவயிற்றுவலி, வயிறு ஊதி இருத்தல், அடுத்தடுத்து ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வு முதலிய அறிகுறிகளுடன் இருப்பினும் பெரும்பாலானோர் அறிகுறிகள் ஏதும் இன்றியே உள்ளனர்.
இதற்கான காரணம் துல்லியமாக தெரியாவிடினும் மரபணு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறைகள் ஆகியவை கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் ஏற்படுதலுக்கு பெரும்பங்கு வகிக்கின்றன. யு.எஸ்.ஜி. ஸ்கேன் பரிசோதனை மூலமாகவே இந்நோய் உறுதி செய்யப்படும். மேலும் இந்த பரிசோதனை மூலம் கட்டியின் அளவு, இருப்பிடம், எந்த வகையிலான கட்டி என்பதனையும் அறிய இயலும். பெரும்பாலும் கட்டியின் அளவு, இருப்பிடம், தீவிரத்தன்மை மற்றும் நோயாளியின் நிலையை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சுருங்கத் தொடங்கும்
அதாவது மையோமெக்டமி போன்று கட்டியை மட்டுமோ அல்லது ஹிஸ்டரெக்டமி எனப்படும் கர்ப்பப்பையையோ அகற்றும் அறுவை சிகிச்சை முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கான ஒற்றை தீர்வாக கருத இயலாது. கட்டியின் ஆரம்ப நிலைகளில் சிறிதான அளவுகளில் இருக்கும்போதே குறிப்பிட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம் கட்டியின் அடுத்தடுத்த வளர்ச்சியை குறைக்க வாய்ப்புகள் இருப்பதோடு அறிகுறிகளிலிருந்து குணம் பெறலாம். பெரிய அளவிலான கருப்பை நார்த்திசுக்கட்டிகளுக்கு குறிப்பாக வஸ்தி போன்ற ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.
பொதுவாக கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகள் என்பவை முழுவதுமாக சரியாகக் கூடியவை அல்ல என்பதே உண்மையாகும். இந்நோயை பொருத்தவரை அதன் வளர்ச்சி விகிதத்தை மேற்கொண்டு அதிகப்படாமல் கட்டுப்படுத்துதல் வேண்டும். ஒரு வேளை அதன் வளர்ச்சி விகிதத்தை கட்டுப்படுத்தி விட்டாலும், அதன்பின் 6 மாதத்திற்கு ஒருமுறை தொடர் மருத்துவப் பரிசோதனை மூலம் கட்டியின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். மேலும் அறிகுறிகளிலிருந்து குணம் பெறுவதோடு அறுவை சிகிச்சையினையும் தவிர்த்திட இயலும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெரும்பாலான கர்ப்பப்பை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி பின்னடைந்து சுருங்கத் தொடங்கி விடும்.
ஆயுர்வேத மருத்துவமனை
அதன்பின் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறையான தொடர்பரிசோதனை மற்றும் தொடர்சிகிச்சையே போதுமானதாகும். மேலும் இதுகுறித்த கேள்விகள், விளக்கங்கள் ஏதேனும் இருப்பின் நாகர்கோவில் கோட்டார், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெண்கள் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவை (அறை எண்-3) அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story