கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வராமலே வேலூர் கோட்டையில் இருந்து காட்பாடிக்கு செல்ல புதிய சாலை


கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வராமலே  வேலூர் கோட்டையில் இருந்து காட்பாடிக்கு செல்ல புதிய சாலை
x
தினத்தந்தி 13 Dec 2021 11:19 PM IST (Updated: 13 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வராமலே வேலூர் கோட்டையில் இருந்து காட்பாடிக்கு செல்ல புதிய சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

கிரீன்சர்க்கிள் பகுதிக்கு வராமலேயே வேலூர் கோட்டையில் இருந்து காட்பாடிக்கு செல்ல புதிய சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் பகுதியில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலூரிலும் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகரித்துவிட்டது. கிரீன் சர்க்கிளில் சாலையை அகலப்படுத்த வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நேற்று காலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து கிரீன்சர்க்கிள் சர்வீஸ் சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் சென்று பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் சர்வீஸ் சாலை வழியாக மீண்டும் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வந்தனர். கிரீன் சர்க்கிள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாற்றுப்பாதை

அமைச்சர் துரைமுருகன் உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முக்கியமாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி இந்த பகுதியில் வாகனங்கள் விரைவாக செல்லவும், கடைகள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்கள் உடனடியாக அகற்றவும், மீண்டும் அங்கு வாகனங்கள் நிறுத்தினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்பவர்கள் கிரீன்சர்க்கிள் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்லவும், அதேபோல கிரீன்சர்க்கிள் பகுதியில் சாலையின் நடுவே உள்ள வளைவை குறைக்கவும், பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாதிரி வாகன சோதனை ஓட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

வேலூர் கோட்டை பகுதியில் இருந்து கிரீன்சர்க்கிள் வராமல் காட்பாடிக்கு செல்லும் வகையில் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய தெரிவித்துள்ளோம். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளும், கட்டிடங்களும் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு மாற்று இடத்திற்கான பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story