வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு பொன்னை கூட்டுக்குடிநீர் வினியோகம் தொடங்கியது
வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு பொன்னை கூட்டு குடிநீர் வினியோகம் தொடங்கியது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு பொன்னை கூட்டு குடிநீர் வினியோகம் தொடங்கியது.
குழாய்கள் சேதம்
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்த குடிநீர் குழாய்கள் சேதம்அடைந்தன. இதனால் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி மற்றும் பொன்னை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பொன்னை குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பொன்னை குடிநீர் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது. அந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் மாற்றாக மற்ற நீர் ஆதாரம் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கமிஷனர் ஆய்வு
மேலும் வேலூர் சத்துவாச்சாரி கப் அண்ட் சாசர் அருவியிலிருந்து குடிநீர் வினியோயம் செய்யப்படுகிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று காலை கப் அண்ட் சாசர் அருவி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 62 எம்.எல்.டி. குடிநீர் தேவைப்படுகிறது. இதில் 32 எம்.எல்.டி. காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மீதம் உள்ள 30 எம்.எல்.டி. தண்ணீர் பாலாறு, பொன்னையாறு மற்றும் ஓட்டேரி, பாகாயம் ஏரிகளிலிருந்து வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னை கூட்டுக்குடிநீர்
பொன்னை குடிநீர் நேற்று இரவு (நேற்று முன்தினம்) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது குறைந்த அளவிலான தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. படிப்படியாக தண்ணீர் அளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சத்துவாச்சாரி கப் அண்ட் சாசர் அருவியில் இருந்து நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. உடைந்த குழாய்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு விரைவில் மாநகராட்சியின் தண்ணீர் தேவை முழுவதும் பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story