ரப்பர் தோட்டத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பிணம்
தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூக்கில் பிணம்
தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இங்குள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்றனர்.
அப்போது ஒரு ரப்பர் மரத்தில் ஒரு ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிணமாக தொங்கியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
நிதி நிறுவன உரிமையாளர்
விசாரணையில் அவர் தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது34) என்பது தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
அய்யப்பன் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது பிணம் ரப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் தற்கொலை செய்தாரா? அல்லது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரப்பர் தோட்டத்தில் நிதி நிறுவன உரிமையாளரின் பிணம் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story