தாயுடன் மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தாயுடன் மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 11:44 PM IST (Updated: 13 Dec 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைத்தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாதி சான்று, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். 

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். 

கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். 

 தீக்குளிக்க முயற்சி

கீழ்பென்னாத்தூர் காட்டுமலையனூர் பகுதியை சேர்ந்த அருள்குமார் (வயது 32) என்பவர் தனது தாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்து மண்எண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே கேனை பிடுங்கி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களது நிலத்தை 2 பேர் ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டனர். 

இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர். 

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழிப்புணர்வு பதாகைகள்

நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 
நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தவறு இனி நிகழாத வண்ணம் மாணவ, மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

அரசு குறிப்பிட்டுள்ள புகார் மற்றும் மீட்பு எண்களான 181, 104, 1098 போன்ற எண்களை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி வகுப்பறையிலும் சுவரொட்டி மூலம் பகிர வேண்டும். மேலும் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் தண்டனை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாற்று இடம் வழங்க வேண்டும்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அண்டம்பள்ளத்தை சேர்ந்த பொதுமக்கள் பா.ம.க. மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் அளித்துள்ள மனுவில், அண்டம்பள்ளம் கிராமம் ஏரி பகுதியில் மொத்தம் 50 வீடுகள் கட்டி ஏழை மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

எங்கள் பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பி உள்ளனர். தொடர் மழை காரணத்தால் மக்களால் வெளியேறி செல்ல முடியவில்லை. அதனால் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கால அவகாசம் 6 மாதம் நீடித்தும் ஏழை மக்கள், வீடு இல்லாதவர்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

 ஊதியம் வழங்க வேண்டும்

துரிஞ்சாபுரம் ஒன்றிய டெங்கு மற்றும் கொரோனா களப்பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 

கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. கொரோனாவில் களப்பணிகளை அதிகாரி சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம். இதனால் குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு வேறு வித வருமானமும் கிடையாது. 

கொரோனா நோயாளிகளிடம் சென்று நாங்கள் உணவு, மருந்து, அறைகளை சுத்தம் செய்தல், கொரோனா நோயாளி இறந்தவர்களை அடக்கம் செய்தல், கொரோனா நோயாளியின் பரிசோதித்த பரிசோதனைகளை எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை களப்பணியாளர்கள் செய்து உள்ளோம்.

எங்களுக்கு கொரோனா பணியின் ஊக்கத்தொகையும், ஊதியமும் வழங்கவில்லை. இதை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மஞ்சு விரட்டு முன்னேற்றம் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அளித்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மார்கழி மாதம் முதல் நாள் மற்றும் தை திருநாள் முதல் 5 மாதங்களுக்கு, கோவில்களில் பொங்கல் வைத்து மஞ்சு விரட்டு திருவிழா நடத்துவது வழக்கம். 

அதுபோல் வருகிற 2022-ம் ஆண்டிலும் மஞ்சுவிரட்டு, காளை விடும் விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story