கும்பகோணத்தில் உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்


கும்பகோணத்தில் உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2021 11:59 PM IST (Updated: 13 Dec 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் உர விலையை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உர விலை உயர்வு

பல மடங்கு உயர்ந்துள்ள பொட்டாஷ், டி.ஏ.பி. உர விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் காலி உர சாக்குகளை தலையில் கவிழ்த்துக் கொண்டு, கண்களை கருப்புத்துணியால் மூடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி. உரம் தமிழகம் முழுவதும் உள்ள 8,400-க்கும் மேற்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு கையிருப்பு இல்லை. இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு கள்ளசந்தையில் உரங்களை பதுக்கி வைத்து கொண்டு, தனியார் நிறுவனங்கள், ரூ.1,040 மதிப்பிலான பொட்டாஷ் உரத்தை ரூ.1,700 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்று கள்ளச்சந்தையில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது வேளாண்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கோட்டாட்சியரிடம் மனு

உர விலைகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தட்டுப்பாடு இன்றி அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
போராட்டத்துக்கு சாமிநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தை தொடர்ந்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியர் லதாவிடம் விவசாயிகள் அளித்தனர்.

Next Story