மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீன்வளத்துறை அலுவலகத்தை பைபர் படகு மீனவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தங்களது பதிவுச்சான்றிதழ்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுக பகுதி மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் கருப்புக்கொடி கட்டி, உப்பனாறு வழியாக கடலூர் துறைமுகம் பகுதிக்கு சென்றனர். பின்னர் அருகில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றக்கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறோம். விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி விதிகளை மீறி கடலூர் துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதிகளில் மீன் பிடித்து வருகின்றனர்.
வாக்குவாதம்
மேலும், 40 மில்லி மீட்டர் அளவிற்கு குறைந்த கண்அளவு கொண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதோடு, படகுகளில் 240 குதிரை திறனுக்கு மேல் உள்ள என்ஜினை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் எங்களது வலைகள் சேதமடைகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதையடுத்து மீன்பிடி விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இதனை கண்டித்தும், கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரியும் எங்களது படகு, மீன்பிடி வலை, படகு பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர்.
இதையடுத்து 20 மீனவ பிரதிநிதிகள் மட்டும் மீன்வளத்துறை அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பதிவுச்சான்றிதழ் ஒப்படைப்பு
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், படகுகளின் பதிவுச்சான்றிதழ்களை மட்டும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையொட்டி அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story