பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
திருச்சுழி அருகே பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
அடிப்படை வசதி
திருச்சுழி ஒன்றியம், மிதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது கல்லத்திகுளம் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தான் இந்த மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்த நிலையில், தற்போது சுமார் 10 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. திருச்சுழியில் இருந்து நரிக்குடி செல்லும் வழியில் மிதலைக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கல்லத்திகுளம் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
கல்வி பாதிப்பு
இந்த கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல் மண் பாதையில் தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பஸ் நிறுத்தம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல குடிநீருக்காக 3 கிலோ மீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள கோரைக்குளம் கிராமத்திற்கு செல்ல வேண்டியசூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் ஊரைச் சுற்றிலும் தீவு போல மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
மேலும், சாலை வசதி இல்லாததால் கிராம மக்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் கூட 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆதலால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தரவும், சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து குடிநீர் வசதிசெய்து தர வேண்டும் என்றும் கல்லத்திகுளம் கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story