நிவாரண உதவி கேட்டு மனு


நிவாரண உதவி கேட்டு மனு
x
தினத்தந்தி 14 Dec 2021 1:32 AM IST (Updated: 14 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கேட்டு மனு அளித்தனர்.

விருதுநகர், 
சாத்தூர் மேல காந்தி நகரை சேர்ந்த தங்கம்மாள் என்ற மூதாட்டி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 
எனது இளைய மகன் சுப்பிரமணி (வயது 32) கடந்த 2 ஆண்டுகளாக சாத்தூர் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி எனது மகன் காந்திநகரில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்துவதற்காக எந்தவித பாதுகாப்பு உபகரணமும் வழங்காமல் அனுப்பப்பட்டார். கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தும் பொழுது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். இது பற்றி எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மகனின் உடலை அவசரமாக பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைத்தனர். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எந்த தகவலும் சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை. எனது மகனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கும்படியும், வயதான பொருளாதாரம் இல்லாத எனக்கு ஓய்வூதியம் வழங்க  கோரியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரூ.25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கும் படியும் கடந்த அக்டோபர் மாதமே சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தாரிடம் உரிய ஆவணங்களுடன் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை விசாரித்து  உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வனவேங்கை கட்சியின் மாநிலத்தலைவர் இரணியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வனவேங்கை கட்சி தொண்டர்களும், இறந்த  தூய்மை பணியாளர் சுப்பிரமணி உறவினர்களும் கலந்து கொண்டனர்.

Next Story