கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வெளிநாட்டில் இருந்து புகார் செய்த பெண் சுடுகாட்டில் இருந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்


கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வெளிநாட்டில் இருந்து புகார் செய்த பெண்  சுடுகாட்டில் இருந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 14 Dec 2021 1:43 AM IST (Updated: 14 Dec 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து ஆத்தூர் போலீசாருக்கு தொலைபேசியில் பேசிய பெண் ஒருவர், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார். அதன்பேரில் சுடுகாட்டில் தகனத்துக்கு வைத்திருந்த அவரது கணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெங்கவல்லி,
வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்
சேலம் மாவட்டம், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் மறுமுனையில் பேசிய  பெண், தனது பெயர் சத்தியவாணி (வயது 40) என்றும், சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாகவும் கூறினார். 
மேலும் கெங்கவல்லி அருகே சமத்துவபுரத்தில் வசித்து வந்த எனது கணவர் சதீஷ்(45) இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதால் உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டில் இருந்து பேசிய அந்த பெண் புகார் கூறியுள்ளார். 
இந்த தகவலை அடுத்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சமத்துவபுரம் பகுதிக்கு சென்று விசாரித்தனர். 
சுடுகாட்டில் தகன ஏற்பாடு
அப்போது சதீஷின் உடலை தகனம் செய்ய அருகில் உள்ள சுடுகாட்டுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கொண்டு சென்ற தகவல் கிடைத்தது. உடனே சுடுகாட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சதீஷின் உடலை உறவினர்கள் தகனம் செய்ய விறகு கட்டைகளை அடுக்கி அதில் வைத்து எரிக்க ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சத்தியவாணியின் புகார் குறித்து சதீஷின் தந்தை கலையரசன் மற்றும் மகன் ஆகாஷிடம்(15) போலீசார் தெரிவித்தனர். பின்னர் சதீஷின் உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இன்று விசாரணை
மேலும் விமானம் மூலம் சத்தியவாணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வந்துவிடுவேன் என்று போலீசாரிடம் கூறியதாகவும், அவர் வந்தவுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 
அதே நேரத்தில் சதீஷின் உறவினர்கள் இது தொடர்பாக கூறியதாவது:-
சதீசுக்கும், அவருடைய மனைவி சத்தியவாணிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. சதீஷ் கடந்த 2 ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். 
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இனிமேல் சிகிச்சை பலன் அளிக்காது என்று டாக்டர்கள் கூறியதால் வீட்டிற்கு அவரது குடும்பத்தினர் சதீசை அழைத்து வந்தனர். அதன்பிறகு கடந்த 4 நாட்களாக வீட்டில் இருந்த சதீஷ் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரபரப்பு
இதனிடையே சத்தியவாணி தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியவாணி விமானத்தில் இன்று வந்த பிறகு தான் விசாரித்து மேற்கொண்டு என்ன நடவடிக்ைக எடுப்பது என்று முடிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் பெண் தெரிவித்த புகாரின் பேரில் சுடுகாட்டில் தகனத்துக்கு வைத்திருந்த கணவரின் உடலை போலீசார் கைப்பற்றிய சம்பவம் கெங்கவல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story