தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சேறும், சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா இடங்கணசாலை-எழுமத்தானூர் அரசு பள்ளி சுற்றுச்சுவர் அருகே குழி தோண்டி மண்ணை சாலையில் போட்டுள்ளனர். இதனால் சாலை சேறும், சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு மாதகாலமாக இதே நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், இடங்கணசாலை, சேலம்.
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் இருபுறமும் கடந்த 6 மாதங்களாக இரு சக்கர வாகனங்களை அணிவகுத்து நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வேப்பனப்பள்ளி.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. வெளியில் நடந்து செல்லும் பொதுமக்களை அவைகள் துரத்தி துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயச்சந்திரன், கோர்ட்டு ரோடு காலனி, சேலம்.
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு 7-வது குறுக்குத்தெருவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் தெருவில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-மணிகண்டன், தாதகாப்பட்டி, சேலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் பல தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
பொதுமக்கள், காவேரிப்பட்டணம்.
சுகாதார சீர்கேடு
சேலம் பொன்னமாபேட்டை தம்பிகாளியம்மன் கோவில் அருகே உள்ள கார்பெட் தெருவில் குப்பை தொட்டி இல்லாததால் அங்குள்ள மக்கள் சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரத்தினம் விஸ்வா, கார்பெட் தெரு, சேலம்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பொ.மல்லபுரம் ஊராட்சி 4-வது வார்டில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், பொ.மல்லபுரம், பாப்பிரெட்டிப்பட்டி.
சேலம் கொண்டலாம்பட்டி 48-வது வார்டு நக்கீரர் தெருவில் சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாததால் சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வருட காலமாகவே இந்த அவலம் நீடிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைப்பார்களா?
-ஊர் மக்கள், கொண்டலாம்பட்டி, சேலம்.
===
Related Tags :
Next Story