வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்,
என்ஜினீயர்
சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் தேசிகன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 27). என்ஜினீயரான இவர் அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய நிலையில், மேலும் தொடர்ந்து படித்து வந்தார். இருந்தாலும் அவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகனின் அறைக்கதவை தட்டினர். அப்போதும் திறக்கப்படாததால் அவர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விக்னேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து விக்னேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் விக்னேஷின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேலை கிடைக்காத விரக்தியில் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story