மகன் கோபித்து சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி


மகன் கோபித்து சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 14 Dec 2021 2:00 AM IST (Updated: 14 Dec 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

மகன் கோபித்து சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்றார்.

பெரம்பலூர்:

போலீஸ் ஏட்டு
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வீராக்கன் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கடந்த 1999-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி முதல் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இதனால் செல்வராஜ் தனது குடும்பத்துடன் பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருவதோடு, அங்கிருந்து பணிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் செல்வராஜின் மனைவி மாலதி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் செல்வராஜ் தனது மகள் சுபாஷினி (21), மகன் கருணாகரனை (16) கவனித்து கொண்டு பணிக்கு சென்று வருகிறார். சுபாஷினி பி.காம் முடித்துள்ளார். கருணாகரன் பிளஸ்-1 படித்து வருகிறார்.
தூக்குப்போட்டு...
இதற்கிடையே செல்வராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி முதல் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் செல்வராஜ் தனது மகன் கருணாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் ‘நான் இனி வீட்டிற்கு வர மாட்டேன்’ என்று தந்தையிடம் கூறி விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சுபாஷினி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மகன் வீட்டை வீட்டு வெளியே சென்றதால் மனமுடைந்த செல்வராஜ் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு, உயிருக்கு போராடினார்.
தீவிர சிகிச்சை
இந்நிலையில் சத்தம் கேட்டு எழுந்த சுபாஷினி, செல்வராஜ் தூக்கில் தொங்கியதை கண்டு ‘எனது தந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story