ஆங்கிலேய கலாசாரம் நம்மை விட்டு விலகாதது வேதனை அளிக்கிறது-மதுரை ஆதீனம் பேச்சு
ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு சென்றாலும் அவர்களது கலாசாரம் விலகாதது வேதனை அளிக்கிறது என்று மதுரை ஆதீனம் பேசினார்.
திருப்பரங்குன்றம்
ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு சென்றாலும் அவர்களது கலாசாரம் விலகாதது வேதனை அளிக்கிறது என்று மதுரை ஆதீனம் பேசினார்.
நக்கீரர் சங்க மாநாடு
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில்உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நக்கீரர் தமிழ் சங்கம் சார்பில் சங்க கால புலவர்கள் போற்றும் நக்கீரர் என்ற தலைப்பில் தமிழ் சங்க மாநாடு நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உலகநாதன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். அகில இந்திய தமிழர் சங்க பேரவை பொதுச் செயலாளர் முகுந்தன் கலந்து கொண்டு மாநாட்டு மலரை பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திலேயே எந்த மொழியிலும் இல்லாத பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அறிஞர்கள் கூடி சங்கம் வளர்த்த தமிழ்மொழி. அதனால் தான் சங்கத்தமிழ் என கூறுகிறோம். தெய்வத்தோடு தொடர்பு கொண்டது தமிழ் மொழி. கடவுள் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. தமிழ் முத்துக்கள் அது நமது சொத்துகள். தமிழகத்தில் ஆங்கில வழி பள்ளிகள்தான் அதிகமாக உள்ளது.
கலாசாரம் மாறவில்லை
ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டாலும் அவர்கள் விட்டு சென்ற மொழி, கலாசாரம் நம்மைவிட்டு விலகவில்லை. அது நம்மிடம் இருந்து மாற வேண்டும். ஆங்கில கலாசாரம் ஒழிய வேண்டும். ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது வருத்தமாக உள்ளது. தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் வளரும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்வி கற்பதற்காக ஏழை மாணவர்களை தேடி உதவி செய்து வரும் சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் உள்பட 15-க்கும் மேற்பட்டோருக்கு நக்கீரர் விருது வழங்கப்பட்டது. முடிவில் சங்க தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story