சேலம் மெய்யனூரில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சேலம் மெய்யனூரில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
போராட்டம்
சேலம் மெய்யனூர் இட்டேரி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதன் அருகில் புதிதாக மற்றொரு கடையை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி டாஸ்மாக் கடை அமைக்க உள்ள இடத்தில் இருந்து மெய்யனூர் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடை அருகே வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ரமா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து புதிதாக டாஸ்மாக் கடை அமைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்புறப்படுத்த வேண்டும்
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், இந்த பகுதியில் ஏற்கனவே மதுக்கடை உள்ளது. ஆனால் இன்னொரு மதுக்கடை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இங்கு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை அலுவலகம், மின்வாரிய அலுவலகம், மயானம், தனியார் மருத்துவமனை மற்றும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன. ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என்றனர்.
Related Tags :
Next Story