அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினார்.
விருப்ப மனு
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும் தலா ஒரு அவைத்தலைவர், வட்ட செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், பிரதிநிதிகள், கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், சிவகிரி ஒன்றியத்தில் உள்ள 4 பேரூராட்சிகள், ஈரோடு ஒன்றியத்தில் உள்ள 2 பேரூராட்சிகள் என மொத்தம் 15 பேரூராட்சிகளுக்கும், கிராமப்பகுதி கிளை நிர்வாகிகளுக்கும் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ள எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தேர்தல் படிவங்களை வழங்கினார்.
அ.தி.மு.க. வளர்ச்சியை...
அதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் என்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கத்துக்கு உள் கட்சி தேர்தல் என்பது பிரதானமானது. அப்போது இருந்த அதே எழுச்சியை இப்போதும் பார்க்க முடிகிறது. உள்கட்சி தேர்தலில் விருப்ப மனுவை, அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெற்று வருகின்றனர்.
விரைவில் நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடும். அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும். அதற்கான பலம் அ.தி.மு.க.விடம் உள்ளது. அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுத்துவிடலாம், அழித்துவிடலாம் என பலர் திட்டம் போடுகின்றனர். அந்த திட்டங்கள் ஒரு போதும் நடக்காது. அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அழித்துவிடவும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story