கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 52 மாற்றுத்திறனாளிகள் கைது
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 52 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 52 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சர்க்கரை அய்யப்பன் தலைமை தாங்கினார்.
டெல்லி, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதைப் போல கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5000, குறைந்த ஊனமுற்றவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்க, தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சாலமன் ராஜ், ஒன்றிய தலைவர்கள் கண்ணன், கருப்பசாமி, நகர தலைவர் அந்தோணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஈஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி மற்றும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி மற்றும் போலீசார் மறியல் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட மொத்தம் 52 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story