காலியான 1,450 கால்நடை டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
காலியான 1,450 கால்நடை டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மற்றும் பாலூர், அஞ்சூர், எல்.எண்டத்தூர், ஆகிய ஊராட்சிப்பகுதியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருந்தக கட்டட திறப்பு விழா நடந்தன.
இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினர்.
காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழகம் முழுவதும் 1,450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது எனவும், இது தொடர்பான வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாகவும் அந்த வழக்கிற்கான தீர்ப்பு வந்தவுடன் கால்நடை மருத்துவத்துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடைப்பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். ப.ஜெயந்தி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் கு.சாந்தி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சிக்குழுத்தலைவர் உதயா கருணாகரன், அஞ்சூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story