குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கான பயனாளிகள் பட்டியலில் குளறுபடி கலெக்டரிடம் மக்கள் புகார்


குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கான பயனாளிகள் பட்டியலில் குளறுபடி கலெக்டரிடம் மக்கள் புகார்
x
தினத்தந்தி 14 Dec 2021 6:52 PM IST (Updated: 14 Dec 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கான பயனாளிகள் பட்டியலில் குளறுபடி உள்ளது என கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தேனி:
தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் பகுதியில் குறவர் பழங்குடி மக்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. வாடகை வீடுகளில் வசிக்கிறோம். கடந்த 2017-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த 102 குடும்பங்களுக்கு வடவீரநாயக்கன்பட்டியில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 120 வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வீடுகளுக்கான பயனாளிகள் பெயர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பட்டா வழங்கிய நபர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. எனவே பட்டா பெற்ற நபர்களின் பெயர்களையும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
அதுபோல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கூடலூர் நகர தலைவர் அக்கீம் ராஜா தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், "கூடலூரில் உள்ள ரேஷன் கடையில் சோப்பு, சேமியா போன்ற பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவை எடை அளவு குறைவாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Next Story