ஓசூரில் ஓடும் பஸ்சில் 52 பவுன் நகைகள் திருட்டு-உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் தம்பதி புகார்


ஓசூரில் ஓடும் பஸ்சில் 52 பவுன் நகைகள் திருட்டு-உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் தம்பதி புகார்
x
தினத்தந்தி 14 Dec 2021 8:42 PM IST (Updated: 14 Dec 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் ஓடும் பஸ்சில் 52 பவுன் நகைகள் திருட்டு போனதாக உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் தம்பதி புகார் அளித்துள்ளனர்.

ஓசூர்:
ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பா (வயது 64), விவசாயி. இவருடைய மனைவி காயத்ரி தேவி (56). இவர்கள் இருவரும் கடந்த 9-ந் தேதி ஓசூரில் இருந்து பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடந்த 12-ந் தேதி கர்நாடக அரசு பஸ்சில் ஏறி இருவரும் ஓசூர் வந்தனர்.
ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது, அவர்கள் வைத்திருந்த கைப்பை திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கைப்பையில் 175 கிராம் டாலர் செயின், 120 கிராம் முத்துடன் கூடிய தங்க சங்கிலி, 65 கிராம் எடை கொண்ட 2 வளையல்கள், 12 கிராம் எடையுள்ள ஒரு மோதிரம், 50 கிராம் எடை கொண்ட கம்மல் மற்றும் ஜிமிக்கி என மொத்தம் 422 கிராம் எடை கொண்ட (52 பவுன்) தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
பஸ்சில் அவர்கள் வந்த போது உடன் பயணம் செய்த 2 பெண்கள் 52 பவுன் தங்க நகைகளையும் கைப்பையில் இருந்து திருடி சென்றிருப்பதாக சாந்தப்பா தம்பதியினர் கூறினர். இதன் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் என தெரிவித்த தம்பதியினர், இதுகுறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் நேற்று புகார் அளித்தனர். மேலும் இந்த திருட்டு சம்பந்தமாக ஓசூர் சிப்காட் பஸ் நிறுத்தத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 பெண்கள் கர்நாடக அரசு பஸ்சில் இருந்து இறங்கி சாலையின் குறுக்கே சென்று மீண்டும் அதே பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண்கள் தான் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் என சாந்தப்பா, அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story