கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்


கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:12 PM IST (Updated: 14 Dec 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

தளி, 
தளி பகுதியில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயம் 
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் அமராவதி, திருமூர்த்தி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 தென்னை, வாழை, கரும்பு, நெல், சப்போட்டா, மா போன்ற பயிர்களும் கத்தரி, வெண்டை, அவரை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும், கீரை வகைகளும், மானாவாரியாக கொத்துமல்லி, கொண்டைக்கடலை, கம்பு, சோளம், உளுந்து, எள், போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக பெய்தது. இதனால் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதுடன் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சமதளப்பரப்பை அடைந்து உள்ளது.
அதைத்தொடர்ந்து உடுமலை மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. திருமூர்த்தி அணைப்பாசனத்தில் தக்காளி, பீட்ரூட், அவரை போன்ற காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டது.
பூத்துக்குலுங்கும் கொத்தமல்லி
அதுமட்டுமின்றி பருவமழையை ஆதாரமாகக் கொண்டு மானாவாரியாக பாசிப்பயிறு, உளுந்து, கொத்துமல்லி, தட்டைப்பயிறு போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கி வந்ததால் பயிர்களின் முளைப்புத்திறன் மற்றும் வளர்ச்சி குன்றி விட்டது.
மீதமுள்ள கொத்தமல்லி செடிகள் தற்போது பூத்துக்குலுங்கி விளைச்சலுக்கு தயாராகி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கொத்துமல்லி மண்மணத்துடன் சேர்ந்து மணம் வீசி வருகின்றது. செடிகளை பராமரிப்பு செய்து விளைச்சலை ஈட்டும் நோக்கில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story