தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி


தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி
x
தினத்தந்தி 14 Dec 2021 9:37 PM IST (Updated: 14 Dec 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி

தாராபுரம், 
தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகை வழங்காததால் கோர்ட்டு உத்தரவுபடி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது. 
நல்லதங்காள் அணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் அணை கட்ட கடந்த 5.10.2000 அன்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நல்லதங்காள் அணை கட்ட 646 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் விவசாயிகளின் தோட்டத்து நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 28 ஆயிரமும், மானாவாரி நிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.9,898 தொகையாக நிர்ணயித்து உத்தரவிட்டார். 
இந்த நஷ்ட ஈட்டுத் தொகை போதாது என பொன்னிவாடி கிராமத்தை சேர்ந்த 7 விவசாயிகள் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தர்மபிரபு 5.6.2017 அன்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 7 பேருக்கு தோட்டம் நிலத்துக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், மானாவாரி நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் அத்துடன் 15 சதவீத வட்டி மற்றும் 30 சதவீதம் கருணை தொகையுடன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஜப்தி
ஆனால் நீதிபதி உத்தரவுப்படி நஷ்டஈட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து 7 விவசாயிகள் சேர்ந்து தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதில் 7 விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுத் தொகையாக ரூ.3 கோடியே 61 லட்சத்து 89 ஆயிரத்து 362 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 
இந்த  நஷ்டஈட்டுத் தொகையை அரசு வழங்காததால் தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு அலுவலக நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டது. அப்போது ஆர்.டி.ஓ. மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த போது ஆர்.டி.ஓ அலுவலகம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story