வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததால் நாம் ஆள முடியவில்லை விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததால் நாம் ஆள முடியவில்லை விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 14 Dec 2021 10:10 PM IST (Updated: 14 Dec 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததால் நாம் ஆள முடியவில்லை என விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் எம்.எல்.ஏ., பாலசக்தி, மாவட்ட தலைவர் தங்கஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் புகழேந்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

வீரம் எங்கே போனது

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் அரசு உயர் பதவிகளில் எத்தனை பேர் வன்னியர்கள் இருக்கிறார்கள், ஒரேஒரு வன்னியர் கூட கலெக்டராக இல்லை.
1952-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் நாம் 40 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். 

1954-ல் நடந்த எம்.பி. தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த சம்பந்தம் வெற்றி பெற்றார். இந்தியாவிலேயே இவருக்கு அடுத்தப்படியாகத்தான் நேரு அதிக ஓட்டுகள் வாங்கினார். 

அந்த காலத்தில் இருந்த வன்னியர்களின் உணர்வும், இந்த கால ஊமை மக்களின் உணர்வும் எப்படி இருக்கிறது? வீரம் எங்கே போனது, சத்திரியர்களுக்கே உரிய குணங்கள் எங்கே போனது? இதுவரை தமிழகத்தில் 100 ஆண்டுகளில் பதவி வகித்த முதல்- அமைச்சர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

சி.வி.சண்முகத்துக்கு முக்கிய பங்கு

இந்த சமூகத்தை அழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். எங்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை இடஒதுக்கீடு கேட்டோம், குறைத்துத்தான் கொடுத்தார்கள். 

இந்த இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு முக்கிய பங்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு உண்டு. அவர் இல்லையென்றால் அது சட்டமாகி இருக்காது. 10.5 சதவீதத்திற்கு காரணமாக இருந்த சி.வி.சண்முகம் சட்டசபைக்குள் செல்லக்கூடாது என்று விழுப்புரம் தொகுதி மக்கள் முடிவு செய்துவிட்டனர், அவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார்.

வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 14 உறுப்பினர்கள். அதில் வன்னியர் ஒருவர் கூட கிடையாது. ஒரு உறுப்பினரையாவது வன்னியருக்கு கொடுங்கள் என்று கெஞ்சினேன், ஆனால் 12 இடங்கள் காலியாக இருந்தும் ஒரு இடம் கூட இந்த வன்னியருக்கு கொடுக்க மனமில்லை. 

இப்போது வந்துள்ள மு.க.ஸ்டாலின் அரசு, ஒரு உறுப்பினரை போட்டு இருக்கிறார்கள்.

இனி வரும் காலம் நமது காலம். இந்த ஊமை மக்களுக்காக நான் இறுதி வரை போராடுவேன். எல்லா கட்சியினருக்கும் 10 முறை வஞ்சனை இல்லாமல் வாக்களித்து வீட்டீர்கள். ஒரே ஒருமுறை பா.ம.க.விற்கு வாக்களியுங்கள்.

 தமிழகத்தில் உங்களில் ஒருவர் ஆளட்டும். அதற்கு பொருத்தமான தலைவராக அன்புமணியை கொடுத்து இருக்கிறோம். வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை, அதனால்தான் நாம் ஆள முடியவில்லை.

ஓயமாட்டோம்

 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் எல்லா இடத்திலும் நாம் போட்டியிட போகிறோம். நம்முடைய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே விழ வேண்டும். அங்கே காசுக்கு வேலையில்லை. 10.5. சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தவறான தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

அந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். 10.5 சதவீத இடஒதுக்கீடை பெறாமல் நாம் ஓயமாட்டோம். நிச்சயம் நாம் அதனை பெற்றே தீருவோம்.

 இனி வரும் காலம் நமக்கு நல்ல காலமாக இருக்கும். இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். அந்த விதி என்னவெனில் ஒட்டுமொத்த வன்னியர்களும் எந்த கட்சியில் இருந்தாலும் பா.ம.க.விற்கு வாக்களிப்பது, பிற சமுதாய மக்களிடம் நல்லிணக்கத்தோடு பேசி வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி எடுத்துக்கூறி அவர்களது வாக்குகளை பெறுவது, இதுதான் ஒரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம். நகர்புற தேர்தலில் வெற்றி பெறுவோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, நகர செயலாளர் பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் குழந்தைவேல், ஸ்டாலின், சந்தோஷ், வேல்முருகன், எழிலரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, மாநில இளைஞரணி துணைத்தலைவர் மணிமாறன், நகர தலைவர் போஜராஜன், நகர அமைப்பு செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story