திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராகிம் உள்பட பா/ஜனதாவினர் 50 பேர் கைது
திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜனதாவினர் பிரசாரம்
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திண்டுக்கல்லில் பா.ஜனதா சார்பில் நேற்று பிரசாரம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பிரசாரம் செய்தார்.
அதன்படி திண்டுக்கல் ரவுண்டுரோடு, கோவிந்தாபுரம் மற்றும் குடைபாறைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் பிரசாரம் செய்தனர். இதையடுத்து பேகம்பூர் வழியாக பிரசாரம் செய்தபடி மலைக்கோட்டைக்கு சென்று அங்குள்ள அபிராமி அம்மன் கோவிலை பார்வையிட முடிவு செய்தனர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் குடைபாறைபட்டிக்கு வந்தனர்.
வேலூர் இப்ராகிம் கைது
மேலும் பா.ஜனதாவினர் பேகம்பூர் வழியாக பிரசாரம் செய்தபடி மலைக்கோட்டைக்கு செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் பா.ஜனதாவினர் அங்கிருந்து புறப்பட முயன்றனர். உடனே பா.ஜனதாவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வேலூர் இப்ராகிம், மாவட்ட தலைவர் தனபாலன் உள்பட பா.ஜனதாவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து பா.ஜனதாவினர் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டையில் சாமி சிலைகள்
முன்னதாக வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வீடு தோறும் பிரசாரம் செய்கிறோம். திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் தெய்வீக தன்மை இழந்து காணப்படுகிறது. அங்கு அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் சிலைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. அந்த சான்றுகளை திரட்டி அரசிடம் வழங்க இருக்கிறோம். மேலும் அரசின் அனுமதியுடன் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்கு தேவையின்றி மதச்சாயம் பூசக்கூடாது என்றார்.
Related Tags :
Next Story