மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 541 பேர் கைது


மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 5 இடங்களில்  மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்  541 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2021 10:18 PM IST (Updated: 14 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 541 பேர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம்,

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-மும், கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களில் வழங்குவதைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து பாதிப்பு

இப்போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், துணைத்தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி, பொருளாளர் சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 72 பெண்கள் உள்பட 156 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திண்டிவனம்

இதேபோல்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்  சார்பில் திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறயலில் ஈடுபட்டனர். இதற்கு மயிலம் ஒன்றிய தலைவர் பாவாடைராயன் தலைமை தாங்கினார். 

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மண்டல துணைத் தலைவர் ராமதாஸ், அ.இ.வி.  தொழிற்சங்க கண்ணதாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் யுவராஜ், மயிலம் ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மயிலம் ஒன்றிய பொருளாளர் அங்கமுத்து, ஒன்றிய துணை செயலாளர் மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது அங்கிருந்த திண்டிவனம் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள்  உள்பட 80 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

விக்கிரவாண்டி

இதேபோல் விக்கிரவாண்டியில் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். 

மாவட்ட துணைத் தலைவர் சுப்புராயன், மாவட்ட பொருளாளர் உமா, ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் மங்கை, நிர்வாகிகள் முருகதாஸ், செல்வமணி, சற்குரு தாஸ், பிரபு, அலமேலு  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்களை இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணி நாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 50 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்தனர்.

541 பேர் கைது

மேலும்  கண்டாச்சிபுரத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 100 பேரும், வானூரில் மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 110 பேரும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 541 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story