மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கடலூர், பண்ருட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கடலூர் மற்றும் பண்ருட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
மழைவெள்ள நிவாரணம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
சிறுதொழில் செய்திட மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 14-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
முற்றுகை
அதன்படி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்பு அவர்கள் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனைவரும், கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் வசந்தி, இணை செயலாளர் ராம கிருஷ்ணன், காது கேளாதோர் கூட்டமைப்பு வசந்த குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை ஏற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி
இதேபோல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராசையன், மாவட்ட இணைச் செயலாளர் ஜீவா ஆகியோர் தலைமை தாங்கினர். பழனிவேல், சீனுவாசன், மோகன், வேளாங்கண்ணி, சரவணன், கோபாலகிருஷ்ண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு ரஞ்சித், தனசேகர், பழனிச்சாமி, நந்தகோபால கிருஷ்ணன் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை பண்ருட்டி போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story