ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தகவல்


ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2021 10:45 PM IST (Updated: 14 Dec 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தகவல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, மாவட்டம் முழுவதும் தேவையான இடத்தில் சாலைகள் அமைக்கவும், பாலங்கள் கட்டுவதற்கும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறை மூலம் கட்டிட பணிகள் தொடங்குவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் விரைவில் வழங்கப்பட உள்ளது. மொகலார் கிராமம் செல்லும் வழியில் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் புதிய பாலம் கட்டப்படும். ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா மற்றும் ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து குறிப்பிட்ட கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் அறிவிப்பார். மழை முடிந்தவுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதிய கட்டிடங்கள் அனைத்தையும் காணொலி காட்சி மூலம் இங்கிருந்தபடியே திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரம் பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்குகிறார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களுக்கெல்லாம் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் விளங்குகிறார். அவருக்கு தமிழக மக்கள் என்றென்றும் துணை நிற்கவேண்டும் என்றார். விழாவில் திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story