மாவட்டத்தில் 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97½ கோடி கடன் உதவி-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 கோடியே 57 லட்சம் கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல்:
கடன் உதவி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வசதியாக தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749 கோடியே 85 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்குவதன் அடையாளமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சி
விழாவில் நாமக்கல் மாவட்டத்துக்குட்பட்ட 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,893 பயனாளிகளுக்கு ரூ.97 கோடியே 57 லட்சம் வங்கிக்கடன் வழங்கப்படுவதன் அடையாளமாக 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க இலக்காக இந்த ஆண்டு ரூ.416 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் இதுவரை 6,439 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.314.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக மகளிர் திட்டத்துறை, வங்கி துறையினர், வேளாண்மை துறை, கால்நடைத்துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறையினரால் அமைக்கப்பட்ட கண்காட்சியினை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.
கோமாரி நோய் தடுப்பூசி
முன்னதாக நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் வகையில் 3,31,124 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கால்நடை வளர்ப்போரிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகளுக்கும் மற்றும் கோழிகளுக்கும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
105 குழுக்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்புப்பூசி போடும் பணி 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும், 63,328 எருமையினங்களுக்கும் மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த பணிகளுக்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 105 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 129 நபர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளனர்.
பரிசு
எனவே கால்நடை வளர்ப்பவர்கள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு கேடயங்களையும், கன்றுகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு பரிசுகளையும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை பொட்டலங்களையும் அமைச்சர் வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை தீவனப்புல் கண்காட்சியினை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், நாமக்கல் மாவட்ட ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story