பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சாவு


பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2021 11:30 PM IST (Updated: 14 Dec 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து கைதான மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி

ஆரணி அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து கைதான மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவரது மனைவி ஜெயா (வயது 70). இவர்களுக்கு மகன், மகள் என 5 பேர் உள்ளனர். 

இதில் மூத்த மகன் விஜயகுமார் (50) தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது. நீண்ட நாட்களாகியும் விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைக்காததால் தாய் ஜெயாவிடம், விஜயகுமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் பாகப்பிரிவினை செய்து தரும்படியும் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு ஜெயா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மகன் விஜயகுமார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கூச்சலிட்டுள்ளார். அவருடைய அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் ஏற்கனவே தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் மகன் விஜயகுமாரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் ஜெயா உயிரிழந்ததை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story