வேலூர் கிரீன்சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்


வேலூர் கிரீன்சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2021 11:33 PM IST (Updated: 14 Dec 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கிரீன்சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

வேலூர்

வேலூர் கிரீன்சர்க்கிளில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

அமைச்சர் உத்தரவு

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கிரீன்சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். 

அதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வரும் வாகன எண்ணிக்கையை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்தனர்.

இடதுபுறம் வழியாக...

அதன்படி வேலூரில் இருந்து கிரீன்சர்க்கிள் வழியாக செல்லும் வாகனங்கள் (பஸ்கள், லாரிகள் தவிர) நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதியில் இருந்து இடதுபுறம் பெட்ரோல் பங்க் வழியாக சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்படுகிறது. 

இருசக்கர வாகனங்கள், கார் முதலிய வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு சென்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சாலையை கடந்து சர்வீஸ் சாலையோரம் (சேண்பாக்கம்-வேலூர்) வழியாக கிரீன்சர்க்கிள் செல்லலாம். அதே வேளையில் காட்பாடிக்கு செல்லும் வாகனங்களும் சர்வீஸ் சாலை வழியாக சென்று சுரங்கபாதையை கடந்து புதிய பஸ் நிலைய பின்புறம் சாலை வழியாக காட்பாடிக்கு செல்கிறது.

இந்த மாற்றம் சோதனை ஓட்டமாக மாலை 3 மணி முதல் 7 மணி வரை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

பார்வையிட்டார்

மேலும், இடதுபுறம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படும்போது அந்த சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், சிறிது நேரம் வாகனம் மீண்டும் பழைய வழியில் கிரீன்சர்க்கிளுக்கு திருப்பி விடப்படும் என்றனர்.
இந்த போக்குவரத்து மாற்றத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டார்.

Next Story