கரூரில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு-பொதுமக்கள் பீதி
கரூரில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கரூர்,
பயங்கர சத்தத்துடன் அதிர்வு
கரூரில் நேற்று காலை 11.10 மணியளவில் திடீரென பயங்கர வெடிச் சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வானது ஜவகர்பஜார், லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டது. இதேபோல் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெடி சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.
சாலைகளில் நின்றனர்
கரூர் ஜவகர்பஜாரில் உள்ள கடைகளில் இருந்த கண்ணாடிகள், போர்டுகள் போன்றவை அதிர்ந்தன. இதனால் கடைகளில் இருந்தவர்கள் பயத்துடன் கடைகளை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்து, அச்சத்துடன் நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிர்வு மற்றும் வெடிச் சத்தத்திற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர். இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கரூரில் பயங்கரமான வெடிச் சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. அப்போது பொருட்கள் எல்லாம் அதிர்ந்தது, என்றனர்.
சூப்பர்சோனிக் ஜெட் விமானம்
தஞ்சாவூரில் உள்ள விமானப்படை பயிற்சி மற்றும் இறங்கு தளத்தில் இருந்து அடிக்கடி கோவை சூலூர் விமான பயிற்சி தளத்திற்கு சூப்பர்சோனிக் ஜெட் அதிவேக விமானம் செல்வது வழக்கம். அப்போது அதில் இருந்து வெளிவரும் ஒருவிதமான சத்தம் நிலப்பகுதியில் இதுபோன்ற அதிர்வுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story