தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 15 Dec 2021 12:35 AM IST (Updated: 15 Dec 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான பள்ளி கட்டிடம் 
பெரம்பலூர் மாவட்டம், கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.  இந்த கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் அமர்ந்து படித்து வந்த நிலையில்,  கட்டிடம் இடிந்து மாணவ-மாணவிகள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் அவர்களை அருகில் உள்ள கோவிலில் அமரவைத்து பாடம் நடத்துகின்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியும், மாற்று பள்ளியை தேடியும் செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டும் இதுவரை பலன் இல்லை. இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
இந்துமதி, அகரம்சீகூர், பெரம்பலூர். 

குப்பைகள் சேகரிக்கப்படுவது இல்லை
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஊராட்சியில்  ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரிக்க வருவது இல்லை. இதனால் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை இப்பகுதி மக்கள் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இப்பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டும்போது அவை காற்றில் பறந்து சென்று ஆங்காங்கே விழுவதினால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீழப்பழுவூர், அரியலூர்.

பன்றிகளால் சுகாதார சீர்கேடு 
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் உள்ள சிவன்கோவில் அருகில் ஏராளமான பன்றிகள் சுற்றி வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த கோவிலின் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த கோவிலின் முன்புதான் விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குன்னம், பெரம்பலூர். 

பயன்பாடின்றி உள்ள குளம் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பங்களா குளத்தில் பொதுமக்கள்  பயன்படுத்தும் வகையில் குளத்தின் 4 பகுதிகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இக்குளம் உபயோகம் இன்றி பாசி படர்ந்து காணப்படுகிறது. எனவே இதனை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு  படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், தண்ணீர் எடுத்து செல்வதற்கும் இந்த குளத்தை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறோம். 
கும்பேசேகரன், கறம்பக்குடி, புதுக்கோட்டை. 

வடிகால் வசதி தேவை
கரூர் மாவட்டம், கொளந்தாக் கவுண்டனூரில் உள்ள அம்மன் நகர் பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொளந்தாக் கவுண்டனூர், கரூர். 

அபாயகரமான மின்கம்பம் 
திருச்சி கண்டோன்மெண்ட் ராஜாகாலனி 2-வது மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதில் புதிய மின்கம்பத்தை அமைத்து அதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராஜாகாலனி, திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, கே.சாத்தனூர் களத்துவீடு பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் தற்போது பெய்த மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.சாத்தனூர், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாநகராட்சி 61-வது வார்டு தெற்கு காட்டூரில் உள்ள அனைத்து சாலைகளும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அப்துல் ரஹ்மான், காட்டூர், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், இனாம்குளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை  மேடுபோல் காணப்படுகிறது. இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கிடப்பதினால் அவை காற்றில் பறந்து இப்பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனாம்குளத்தூர், திருச்சி. 
திருச்சி மாவட்டம், தொட்டியம்  வட்டம்,  மேய்க்கல் நாயக்கன் பட்டி கிராமத்தில் திருச்சி-சேலம்  பிரதான சாலையின் அருகில் வாரச்சந்தை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் பொதுமக்கள் இச்சந்தையில்தான் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக இச்சந்தையில் கேகரிக்கப்படும் குப்பைகள் அகற்ற படாமல் ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன்  நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேய்க்கல் நாயக்கன்பட்டி, திருச்சி.

குரங்குகளால் தொல்லை
திருச்சி மாவட்டம், திருவரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை காந்திபுரம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து மளிகை பொருட்களை எடுத்து செல்வதுடன், குழந்தைகள் கையில் இருக்கும் தின்பண்டங்களையும் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுகின்றன. மேலும் இவை பொதுமக்களை கடிக்க வருவதுபோல் அச்சுறுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெட்டவாய்த்தலை, திருச்சி. 

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் 
திருச்சி 36-வது வார்டு பொன்மலைப்பட்டி காந்தி தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு செல்லும் குடிநீர் குறைந்த அளவு செல்வதினால் அவர்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மண் சாலையில் செல்வதினால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி, திருச்சி. 


Next Story