மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Dec 2021 12:50 AM IST (Updated: 15 Dec 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்படும் உதவித் தொகையை மாதா மாதம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மாற்றுத்திறனாளிகள் உள்பட 27 பேரை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அருகில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கந்தர்வகோட்டை
இதேபோல, கந்தர்வகோட்டையில் தாசில்தார் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் இணைந்து நடத்திய மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் பொறுப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். இதனால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story