குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நெல்லை டவுனில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு டவுன் நதிப்புறம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நதிப்புறம் பகுதி மக்கள் நேற்று காலை டவுன் சாலியர் தெரு மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைத்தால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். மேலும் குடிநீர் குழாய்களில் விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story