ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு
நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஸ்கூட்டரில் பணம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் நிஷித். இவர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் முன் கேட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நிஷித் நேற்று ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பாக்சில் வைத்துக் கொண்டு கடைக்கு வந்தார்.
அங்கு ரூ.2 லட்சத்தை மட்டும் ஸ்கூட்டரில் வைத்து விட்டு மீதி பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரின் இருக்கை உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷித் உடனே தான் ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை தேடினார். ஆனால் வைத்த இடத்தில் பணம் இல்லை.
ரூ.2 லட்சம் திருட்டு
ஸ்கூட்டரில் பணம் இருப்பதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபா்கள் இருக்கையை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது. உடனே இதுபற்றி நிஷித் ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து பணம் வைத்திருந்த ஸ்கூட்டரை பார்வையிட்டார். பின்னர் விசாரணை நடத்தினார்.
எனினும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடைக்கு வெளிேய நிஷித் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றபோது அங்கு 5 மர்ம நபர்கள் நின்றதாகவும், திரும்பி வந்து பார்த்த போது அந்த 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள் என்றும் நிஷித் போலீசாரிடம் கூறினார். எனவே அந்த 5 மர்ம நபர்கள் தான் பணத்தை திருடியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி ஆய்வு செய்த போது, திருட்டு நடந்த போது சிலர் கடைக்குள் வந்து பேசி கொண்டு இருக்கும் காட்சி, ஸ்கூட்டர் நிற்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. அந்த பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நாகர்கோவிலில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story