குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி சந்தன மரக்கட்டைகள் சிக்கின; உரிமையாளர் கைது
சிவமொக்காவில் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கைதாகியுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வன ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிவமொக்கா: சிவமொக்காவில் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கைதாகியுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வன ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ரூ.1 கோடி சந்தன மரக்கட்டைகள்
சிவமொக்கா டவுனில் துங்கா நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட துங்காநகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு குடோனில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கிவைத்து இருப்பதாக சிவமொக்கா வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் உடனடியாக வனத்துறையினர், துங்காநகர் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட முகவரியில் உள்ள குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த குடோனில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். மொத்தம் 910 கிலோ சந்தன மரக்கட்டைகள் அங்கிருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
கைது
மேலும் சந்தன மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்திய ஒரு கார், சரக்கு வாகனத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோனின் உரிமையாளரான சையத் அப்சர் (வயது 35) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சையத் அப்சர், வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வெட்டி குடோனில் பதுக்கிவைத்து வெளியூர்களுக்கு கடத்திச் சென்று விற்று வந்ததும், அதுபோல் தற்போதும் சந்தன மரக்கட்டைகளை கடத்திச் சென்று விற்க குடோனில் பதுக்கியதும் தெரியவந்தது.
வன ஊழியர்களுக்கு தொடர்பு
அத்துடன் இந்த கடத்தலுக்கு சிவமொக்கா மாவட்ட வனத்துறையில் பணியாற்றும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதன் பேரில் வனத்துறையினரும், துங்கா நகர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து வன ஊழியர்களிடமும், கைதான சையத் அப்சரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story