திருச்செந்தூர்-பொள்ளாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ஒத்திவைப்பு


திருச்செந்தூர்-பொள்ளாச்சி சிறப்பு  எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 3:08 AM IST (Updated: 15 Dec 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்-பொள்ளாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ஒத்திவைப்பு

மதுரை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இன்று (15-ந் தேதி) முதல் திருச்செந்தூரில் இருந்து மதுரை வழியாக பொள்ளாச்சி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதாவது, இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும், பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை பாசஞ்சர் ரெயிலாகவும் இயக்கப்படுகிறது. இது தமிழக, கேரள மக்களிடையே பாரபட்ச உணர்வை தூண்டுவதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
மேலும், பல்வேறு ரெயில்வே திட்டங்களில் தென்னக ரெயில்வே கேரளத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று இயக்கப்படுவதாக இருந்த திருச்செந்தூர்-பொள்ளாச்சி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தென்னக ரெயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில், இந்த ரெயில் இயக்க விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வலியுறுத்தும்படி சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ரெயிலை, திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு இயக்குவதற்கு பதிலாக, கோவை வரை இயக்க தென்னக ரெயில்வே பொதுமேலாளரை முதல்-அமைச்சர் வலியுறுத்தவும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story