‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 15 Dec 2021 2:02 PM IST (Updated: 15 Dec 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அச்சம் நீங்கியது; மக்கள் நிம்மதி



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் 28-வது தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை வாசலில் தெரு மின்விளக்குகளை இயக்கும் மின்சார சுவிட்ச் பாக்ஸ் உயரம் குறைந்த நிலையிலும், மூடியில்லாமல் திறந்தநிலையிலும் இருக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த சுவிட்ச் பாக்சை பாதுகாப்பாக சீரமைத்துள்ளனர். அச்சம் நீங்கியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சிமெண்டு சாலை சேதம்

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் 4-வது தெருவில் உள்ள சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. 2 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- சமூக ஆர்வலர்கள்.

எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும்

சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் ஐ.சி.எப்.காலனி பஜார் தெருவில் சாலையோரம் குப்பைகள் அதிகம் கொட்டப்படுகின்றன. தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டால் இந்த இடம் குப்பைமேடு போன்று மாறக்கூடும். எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-ஜி.பிராஷ், குடியிருப்போர் நலச்சங்கம்.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

சென்னை செம்பியம் பொன்னுசாமி நகர் 1-வது தெருவில் பயன்பாடு இல்லாமல் குடிநீர் வாரியத்தின் குடிநீர் தொட்டி (சிண்டக்ஸ்) உள்ளது. இதனால் கொசு, பூச்சுகள் தொல்லை தாங்க முடியவில்லை. வெறும் காட்சி பொருளாக இருக்கும் இந்த குடிநீர் தொட்டி அப்புறப்படுத்தப்படுமா?

-பி.முகமது கலிலுல்லா

பயணியர் நிழற்குடையை மறைத்து கல்வெட்டு



செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சி பயணியர் நிழற்குடையை மறைத்து அரசியல் கட்சி சார்பில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணியர் நிழற்குடை எதற்காக கட்டப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

-பெரும்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை மேற்கு அண்ணாநகர் ஐஸ்வர்யா பிளாட்ஸ் ‘ஐ’ பிளாக் 37-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி வயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மின் பெட்டி பயன்பாடின்றி இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் இருக்கிறது. ஆபத்தான இந்த மின் இணைப்பு பெட்டியை அகற்ற வேண்டும்.

-ஆ.வாசுதேவன், அண்ணாநகர் மேற்கு.

பஸ் நிலையங்களில் இருக்கைகள் தேவை

சென்னை மந்தைவெளி, திருவான்மியூர், திரு.வி.க.நகர், திருவொற்றியூர் பஸ் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். ஓரிரு இருக்கைகள் மட்டும் இருப்பதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள்.

- சமூக ஆர்வலர்கள்.

போதை ஆசாமிகள் அட்டூழியம்

சென்னை ஆவடி கள்ளுக்கடை குறுக்கு சந்தில் போதை ஆசாமிகள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகிறார்கள். பகல்-இரவு என்று பாராமல் மது குடித்துவிட்டு ரகளை செய்து வருகிறார்கள். இவர்களின் அராஜகம் தாங்கமுடியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

- சமூக ஆர்வலர்கள்.

சேதமடைந்த தார்சாலை செப்பனிடப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செம்பூர் கிராமத்தில் உள்ள பவுஞ்சூர் - அணைக்கட்டு பகுதிக்கு செல்லும் தார்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக படுமோசமாக இருக்கிறது. ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. இச்சாலை சீரமைக்கப்படுமா?

- பொதுமக்கள், செம்பூர் கிராமம்.

பாழடைந்து போன அரசு இடம்

சென்னை வியாசர்பாடி நேரு நகர் 1-வது தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பால்பண்ணை செயல்பட்டு வந்தது. தற்போது குப்பைகள் நிறைந்து இந்த இடம் பாழடைந்து மோசமாகியிருக்கிறது. இந்த இடத்தை சீரமைத்து, பராமரித்து அரசின் திட்டங்களுக்காக பயன்படுத்தி கொள்ளலாமே..

- வெங்கடேசன், வியாசர்பாடி.

எரியாத தெருவிளக்கு

சென்னையை அடுத்த எண்ணூர் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக எரிவதே கிடையாது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

- வி.ராஜ்குமார், எண்ணூர்.

சாலையில் ராட்சத பள்ளங்கள்

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் பஜனை கோவில் தெரு முதல் விஜயலட்சுமி நகர், ஸ்ரீநகர் முழுவதும் சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விமல்ராஜ், காட்டுப்பாக்கம்.

நாய்கள்-பன்றிகளால் தொல்லை

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட வசந்தபுரம் வெங்கடேஸ்வரா நகரில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் பன்றிகள், நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது அப்பகுதிவாசிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

- பொதுமக்கள், வசந்தபுரம் வெங்கடேஸ்வரா நகர்.

வீட்டு சுவர் மீது சாய்ந்துள்ள மின்கம்பம்



சென்னை எம்.ஜி.ஆர். நகர் நாவலர் காலனி அண்ணாவீதியில் (சூளை பள்ளம் ரோட்டுக்கு செல்லும் வழியில்) உள்ள எனது வீட்டின் அருகில் 3 மாதங்களுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டது. சற்று தள்ளிவைக்க கேட்டுக்கொண்ட போதும் அதிகாரிகள் உடன்படவில்லை. தற்போது மழை காரணமாக அந்த மின்கம்பம் வீட்டின் சுவர் மீது சாய்ந்து கிடக்கிறது. இதனால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

- விஜயலட்சுமி, அண்ணாவீதி.

Next Story