கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறைந்தது: வல்லூர் அணைக்கட்டு சுற்றுலா தலமாக மாறியது


கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறைந்தது: வல்லூர் அணைக்கட்டு சுற்றுலா தலமாக மாறியது
x
தினத்தந்தி 15 Dec 2021 3:59 PM IST (Updated: 15 Dec 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த சீமாபுரம் கிராமம் வழியாக கொசஸ்தலை ஆறு செல்லும் நிலையில், வல்லூர் அணைக்கட்டில் பொதுமக்கள் உற்சாகமாக குளியல் போடுகின்றனர்.

மீஞ்சூர்,

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்ததால் கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகமானது.

இதனால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மாத காலமாக வெள்ளநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் தற்போது 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறைந்தது.

இந்தநிலையில் மீஞ்சூர் அருகே உள்ள சீமாபுரம் கிராமத்தின் வழியாக வல்லூர் அணைகட்டு பகுதியில் குறைவான தண்ணீர் வழிந்தோடுகிறது.

இந்த ஆற்றங்கரைக்கு இருபுறங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கை மீஞ்சூர், பொன்னேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதியில் தினந்தோறும் குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் அங்கு வாகனங்களில் குடும்பத்துடன் வந்து உணவு சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் வல்லூர் அணைக்கட்டு சுற்றுலா தலம் போல் களைகட்டியுள்ளது.

Next Story