கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Dec 2021 5:54 PM IST (Updated: 15 Dec 2021 5:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முடுக்குமீண்டான்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முடுக்குமீண்டான்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு முடுக்கு மீண்டான்பட்டி ஆதிதிராவிடர் மக்கள், புரட்சி பாரதம் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் சந்தின மாரியம்மாள், ஊர் நாட்டாமை லட்சுமணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கரன் நாராயணனை சந்தித்து மனு கொடுத்தார்கள். மனுவில் கூறியிருந்ததாவது:-
கோரிக்கைகள்
முடுக்குமீண்டான்பட்டி எஸ். டி. ஏ. சர்ச் தெருவில் 200 ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்தவர்கள் குடியிருந்து வருகிறோம். பஞ்சாயத்து உருவான காலத்திலிருந்து ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகள் புறக்கணிக்கப் பட்டு வருகிறது. தற்போது ரிசர்வ் தொகுதியாக மாறி இருக்கிறது.
எங்கள் பகுதியில் சுடுகாட்டிற்கு தேவையான இடமும், பாதையும், தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும்.
பெண்களுக்கான கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல் அமைத்து தரவேண்டும்.
சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டு மனை ஒதுக்கி வீடு கட்டித்தர வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் கல் பதித்து தரவேண்டும். தரமான குடிநீர் வசதி, வாறுகால் வசதி, பழுதான தெரு விளக்குகளை மாற்றி எரியவிட வேண்டும். நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
உதவி கலெக்டர் உறுதி
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story