2-வது சுரங்கத்தில் பணியின்போது என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு உறவினர்கள் போராட்டதால் பரபரப்பு


2-வது சுரங்கத்தில் பணியின்போது  என்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவு  உறவினர்கள் போராட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 8:26 PM IST (Updated: 15 Dec 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

2-வது சுரங்கத்தில் பணியின்போது என்.எல்.சி. தொழிலாளி திடீரென இறந்தார். என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம், 

மயங்கி விழுந்து சாவு 

மந்தாரக்குப்பம் அடுத்த அம்பேத்கர் நகர் வேப்பங்குறிச்சியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 52). என்.எல்.சி. தொழிலாளியான இவர், 2-வது சுரங்கத்தில் மண்வெட்டும் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார்.
அப்போது நள்ளிரவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்ர்கள், ஏற்கனவே இளங்கோவன் இறந்துவிட்டதாக கூறினர். 

உறவினர்கள் முற்றுகை 

இது பற்றி அறிந்ததும் இளங்கோவனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு, 2-வது சுரங்க நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இளங்கோவன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். 
இதையடுத்து இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்க உறுப்பினர்களை அழைத்து என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story