செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 8:40 PM IST (Updated: 15 Dec 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கூடலூர்

கூடலூர் புரமணவயல் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

செல்போன் கோபுரம் 

கூடலூர் அருகே புரமண வயல் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் 300- க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் அந்த செல்போன் கோபுரத்தை உடனடியாக அகற்றக்கோரி அவர்கள் கலெக்டர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவும் கொடுத்து உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:- 

மாற்ற நடவடிக்கை 

எங்கள் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகள் எந்தவித ஆய்வும் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் மிகவும் பலம் இழந்த கட்டிடத்தில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கட்டிடம் பலமிழந்து கோபுரம் சரிந்து விழும் அபாய நிலை நீடித்து வருகிறது.  

மேலும் செல்போன் கோபுரம் அமைக்க சட்ட வழிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

போராட்டம் நடத்த முடிவு 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பலம் இழந்த கட்டிடத்தில் செல்போன் கோபுரம் இருப்பதால் எந்த நேரத் திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை மாற்ற நடவடிக்கை எடுக்க மனு அளித்து உள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றனர். 


Next Story