ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர் சிறப்பு பூஜை
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர் சிறப்பு பூஜை
ஊட்டி
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர் சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் நஞ்சப்ப சத்திரம் கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் கடந்த 8-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் நேற்று உயிரிழந்தார்.
விமானப்படையினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள ஹெலிகாப்டர் பாகங்களை சேகரித்து மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிறப்பு பூஜை
இந்த நிலையில் நேற்று வெலிங்டன் ராணுவ மையம் சார்பில், விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேரின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதற்காக 2 புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். எம்.ஆர்.சி. கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங் தலைமையில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் வீரமரணமடைந்த அதிகாரிகளுக்கு மந்திரங்கள் ஓதி சாஸ்திரம் செய்யப்பட்டது. அப்பகுதி தொடர்ந்து ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
கிராம மக்கள் அஞ்சலி
மேலும் நேற்று பலியான வருண்சிங் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நஞ்சப்பசத்திரம், காட்டேரி கிராம மக்கள் நேற்று மாலை காட் டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வருண் சிங் மற்றும் 13 ராணுவ அதிகாரிகளின் உருவப்படத்துக்கு மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் வருண்சிங்குக்கு மவுன அஞ்சலியையும் செலுத்தினார்கள்.
36 பேரிடம் விசாரணை
மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட வர்கள், நேரில் பார்த்தவர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட் டோர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். போலீஸ் தரப்பில் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. விமானப்படை விசாரணை ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.
நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் 60 குடும்பத்தினரை சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருள்ரத்தினா மற்றும் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் கலப்பு திருமணம், முதியோர் ஓய்வூதியம், முதல் பட்டதாரி இருக்கிறார்களா என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த விவரங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, உதவிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு அபாயகரமான மரங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story