முதுவாக்குடி மலைக்கிராமத்தில் முடங்கிய பராமரிப்பு பணிகள்
போடி அருகே முதுவாக்குடி மலைக்கிராமத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் முடங்கியுள்ளதாக கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர்.
தேனி:
பழங்குடி மக்கள் மனு
போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் உள்ள முதுவாக்குடி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் சிலர், 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பகல் 11 மணியளவில் அந்த மக்கள் அங்கு வந்த போது கலெக்டர் முரளிதரன் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக கொடுவிலார்பட்டிக்கு சென்று இருந்தார். இதனால், 3 மணி நேரத்துக்கும் மேல் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் காத்திருந்தனர். பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் கலெக்டர் முரளிதரன் அங்கு வந்தார். அவரிடம் பழங்குடியின மக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதுவாக்குடி மலைக்கிராமத்தில் 2020-21-ம் நிதியாண்டில் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பராமரிப்பு பணி செய்ய டெண்டர் விடப்பட்டது. 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டிய பணியை பல மாதங்களாக முடிக்கவில்லை.
ஏராளமான இன்னல்கள்
மொத்தம் 14 வீடுகளில் 4 வீடுகள் மட்டும் பெயரளவில் பணி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற வீடுகள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. அதுபோல், 2020-21-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்ட நிலையில், இதுவரை அதற்கான பணிகளிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கடந்த 4 மாத காலமாக பெய்யும் தொடர் மழையால் நாங்கள் ஏராளமான இன்னல்களை அனுபவித்தோம். எனவே, கலெக்டர் ஒரு முறையாவது எங்கள் பழங்குடியின குடியிருப்பான முதுவாக்குடிக்கு வந்து எங்கள் அவல நிலையை காண வருமாறும், முடங்கிக் கிடக்கும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய வீடுகள் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனு அளித்த மக்களிடம் கலெக்டர் வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது மக்கள் தங்கள் பகுதிக்கு பாதை வசதி, ஏற்கனவே பட்டா வழங்கிய மக்களுக்கு சிட்டா, அடங்கல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். இதையடுத்து இந்த மனு குறித்து நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story