லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்திய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Dec 2021 9:18 PM IST (Updated: 15 Dec 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு லாரியில் கடத்திய 7½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உத்தமபாளையம்: 

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கம்பத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையுள்ள 150 மூட்டைகளில் 7½ டன் ரேஷன் அரிசி குருணையாக இருந்தது. அந்த லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், பெரியகுளம் அருகே உள்ள வடபுதுப்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 48) என்றும், கம்பம் பகுதியில் ரேஷன் அரிசியை மொத்தமாக விலைக்கு வாங்கி, குருணையாக மாற்றி நாமக்கல்லுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

இதேபோல் கூடலூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு மினி லாரியில் கடத்தி செல்ல இருந்த 1½ டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவர் பிரசாத் (30) என்பவரை கைது செய்தனர். 


Next Story