சக பணியாளரின் இல்ல விழாவால் எழுந்த சர்ச்சை: ஒட்டுமொத்த ஊழியர்களும் பணிக்கு வராததால் வெறிச்சோடிய ஒன்றிய அலுவலகம் திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு
சக பணியாளர் இல்ல விழாவில் பங்கேற்க திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அலுவலகத் துக்கு ஒட்டுமொத்த ஊழியர்களும் பணிக்கு வராமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அலுவலக பணிகள் மற்றும் பல்வேறு குறைகளுடன் அலுவலகம் தேடி வரும் மக்களுக்கும் தேவையான சேவைகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் ஊழியர்கள் யாரும் அலுவலகத்துக்கு வராததால், வெறிச்சோடி காணப்பட்டது.
வேலை நிறுத்தமா?
இதனால் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வீட்டு வரி சான்று மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான அனுமதி பெறுவது, கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை பெறுவது, புதிய விண்ணப்பம் அளிப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் என்று பலர் தங்களது தேவைகளை சரி செய்வதற்காக அதிகாரிகளை சந்தித்து மனு மற்றும் விண்ணப்பங்கள் அளிக்க வந்தனர்.
ஆனால் அதிகாரிகளோ, ஊழியர்களோ யாரும் அங்கு இல்லாததை கண்டு அவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளானர்கள். மேலும் இன்று ஏதேனும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளார்களா என்று அங்கிருந்தவர்களிடம் பலர் கேட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. இதேபால் அன்றாட அலுவலக பணிகளும் ஒட்டுமொத்தமாக முடங்கியது.
சர்ச்சைக்கு உள்ளானது
இதுபற்றி விசாாரித்த போது தான் உண்மை நிலை தெரியவந்தது. அதாவது, அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரது இல்ல நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நடந்துள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சென்று இருப்பது தெரியவந்தது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவசியமானது தான் என்றாலும் கூட ஒட்டுமொத்தமாக இதுபோன்று சென்றது தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே மதியம் 2 மணிக்கு மேல் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story