பெண் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு


பெண் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 9:47 PM IST (Updated: 15 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.


விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா ஒல்லியாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜேஷ் (வயது 28), கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும் 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். 

அப்போது ராஜேஷ், அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி  பலாத்காரம் செய்தார்.

பின்னர் அந்த பெண், ராஜேசிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு திருப்பூருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பெண்ணை ராஜேஷ் அழைத்துக்கொண்டு திருப்பூருக்கு செல்வதாக கூறினார். பின்னர் திருப்பூருக்கு செல்ல வேண்டாம் என்றும் உளுந்தூர்பேட்டை சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அந்த பெண்ணை ஏமாற்றி அங்குள்ள பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு சென்று விட்டார். 

அதன் பிறகு அந்த பெண், ராஜேசிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராஜேசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Next Story