பிப்ரவரி மாதத்திற்குள் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்


பிப்ரவரி மாதத்திற்குள் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
x
தினத்தந்தி 15 Dec 2021 9:50 PM IST (Updated: 15 Dec 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

பிப்ரவரி மாதத்திற்குள் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

தளி, 
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு முகாம் 
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதன் உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைவளர்ப்பு நாள்தோறும் வருமானத்தை அளிப்பதுடன் இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. 
இந்த சூழலில் கால்நடைகளை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வகையில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் உடுமலை பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கொடிங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையபாளையம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
60 முகாம்கள்
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் வே.ஜெயராம் கூறியதாவது:-
கால்நடை மருத்துவ வசதி இல்லாத தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் பயனடையும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் தலா 20 முகாம்கள் வீதம் மொத்தம் 60 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 
பிப்ரவரி இறுதிக்குள்
அதன்படி பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து முகாம்களையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். 
சுகாதார விழிப்புணர்வு முகாம்களில் குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறையில் கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை போன்றவை இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே உடுமலை கோட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்தார்.
327 கால்நடைகளுக்கு சிகிச்சை 
முகாமிற்கு ஊராட்சிமன்றத்தலைவர் கிருஷ்ணவேணி சரவணப்பெருமாள் முன்னிலை வகித்தார்.கால்நடை உதவி மருத்துவர்கள் அரவிந்த், கார்த்திகேயனி, ராஜன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 327 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.முகாமில் நடைபெற்ற கன்று பேரணியில் கலந்துகொண்ட கன்றுகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story