நாளை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
நாளை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணை பகுதியில், தளி வாய்க்காலில் புதிய குழாய் பொருத்தும் பணிகள் தொடர்வதால் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் நாளை வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கூட்டுக்குடிநீர் திட்டங்கள்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்காலை நீர் ஆதாரமாகக்கொண்டு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகளில் 318 கிராம குடியிருப்புகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள 5 பேரூராட்சி பகுதிகள் கணக்கம்பாளையம், பூலாங்கிணர், மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு ரூ.85 கோடியே 75 லட்சத்தில் நடைபெற்று வரும் பணியில், திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்காலில் தண்ணீர் எடுப்பதற்கான புதியகுழாய் இணைப்பு பொருத்தம் பணிகளுக்காக இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 3 ஒன்றிய பகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
நாளை வரை குடிநீர்
வினியோகம் நிறுத்தம்
இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுப்பதற்காக திருமூர்த்தி அணை-தளிவாய்க்காலில் புதிய குழாய் இணைப்பு பொருத்தும் பணிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கி இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்ட திருப்பூர் கோட்ட நிர்வாகப்பொறியாளர் ரங்கராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த புதிய குழாய் இணைப்பு பொருத்தும் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்படுவதாக நிர்வாகப்பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த நாட்களில் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story