மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே வீடு புகுந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகையை கொள்ளையடித்த வழக்கில் 1½ ஆண்டுகளுக்குப்பிறகு மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
பொங்கலூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 50). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப் போது வாடகைக்கு வீடு கேட்பது போல் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் சந்திராவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து சந்திரிகா வீட்டினுள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அவர் பின்னால் சென்ற இருவரும் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 29 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் புருஷோத்தமன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் புருஷோத்தமனின் சொந்த ஊர் தாராபுரம் சகுனிபாளையம் என்றும்,அவருடன் வந்தவர் அவரது தந்தை செல்வராஜ் (58) என்றும் தெரியவந்தது.
மேலும் ஒருவர் கைது
இதனை தொடர்ந்து புருசோத்தமனிடம் இருந்து 20 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் புருஷோத்தமன் தந்தையை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று அவினாசிபாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆண்டிபாளையத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வராஜ் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொள்ளை வழக்கில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story